தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலோர தமிழகத்தின் வளி மண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கன மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்றிரவும் மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் மழை பெய்துள்ளது. எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு, முகப்பேர், வடபழனி, கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அடையார், துரைப்பாக்கம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூர், ஆவடி, திருமுல்லைவாயல், வில்லிவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.
தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 72 மி.மீ. மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 7.8 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 1.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.