X

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அந்தவகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று (வியாழக்கிழமை) பெய்யக்கூடும்.

நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.