X

தமிழகத்தில் 11 ரெயில்களை தனியார் நிறுவனம் இயக்குகிறார்கள் – ரெயில்வேதுறை அறிவிப்பு

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது.

இதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரெயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்காக 100 வழித்தடங்களை ரெயில்வே வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 11 ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை-மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மும்பை, மங்களூர், செகந்தராபாத், டெல்லி ஆகிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்காக 10 முன்னணி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த மாதம் டெண்டர் உறுதி செய்யப்பட்டு விடும் என்று ரெயில்வே வாரிய தலைவர் சுனீத்‌ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கட்டண நிர்ணயம் மற்றும் ரெயில் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் அருகில் நிலங்கள் ஒதுக்குவது ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.

தனியார் ரெயில்களின் தென்னக முனையமாக தாம்பரம் இருக்கும். தண்டையார்பேட்டையில் ரெயில் பராமரிப்புக்கான வார்டு ஒதுக்கப்படுகிறது.

தனியார் ரெயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நிறைவடைய உள்ளன. ஆனால் இந்த திட்டத்துக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தென்னக ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி., தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஞானசேகரன் கூறும்போது, ஒரே வழித்தடத்தில் தனியார் ரெயிலும் செல்லும், அரசு ரெயிலும் செல்லும். தனியார் ரெயில்களில் கூடுதல் வசதிகளை செய்து அதற்கு ஏற்ற வகையில் கட்டணங்களையும் நிர்ணயிப்பார்கள்.

இதன் மூலம் ரெயில் பயணத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாட்டை அரசே உருவாக்குகிறது. அரசுக்கு வரவேண்டிய வருமானம் தனியார்களுக்கு செல்கிறது என்றார்.