Tamilசெய்திகள்

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது.

இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.

11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *