தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந் துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.17 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.69 ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.26 ஆகும்.
பிளஸ்-1 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7534 ஆகும். இதில் 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 241 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியையும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியையும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீத தேர்ச்சியையும், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீத தேர்ச்சியையும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீத தேர்ச்சியையும், ஆண்கள் பள்ளிகள் 81.37 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளன. 8418 மாணவ-மாணவிகள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8221 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். இதில் 7504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.27 சதவீதம் ஆகும். சிறை கைதிகள் 187 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 90.90 சதவீதம் ஆகும்.
96.02 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அரசு பள்ளிப் பள்ளிகளை பொருத்தவரை 92.86 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
மாணவ-மாணவிகள் www.tnresult.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.