கொரோனா நோய் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த 27-ம் தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது.
முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது.
இதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.