X

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும்.

அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்து வருகிறார்கள். இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வேலை பளுவும் அதிகரிக்கிறது.

இதனை எளிதாக்கும் வகையில் 38 வகையான பதிவேடுகள் இணைய வழியில் பராமரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர்கள் விடுப்புகள் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கும், படிப்பதற்கு வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்கும் கல்வி அலுவலகங்களை நாட வேண்டி இருந்தது. அவை எளிதாக்கப்பட்டு இருக்கும் இடத்திலேயே விண்ணப்பித்து இந்த பணி பலன்களை பெறலாம். ஆசிரியர்களுக்கு எந்தெந்த நாட்களில் பயிற்சி அளிப்பது என்பது குறித்து நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது தவிர காலாண்டு, அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளும் அந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் பள்ளி செயல்படும் நாட்கள் மாறுபட்டு இருந்தது. வருகிற கல்வியாண்டு முதல் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெறும்.

ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 20-ந்தேதி 12-ம் வகுப்புகளுக்கும், ஜூன் 27-ந்தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கு அப்பாற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தால் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இரண்டு மார்க், ஐந்து மார்க் வினாக்கள் பாடத்துக்கு வெளி பகுதியில் இருந்து கேட்டதாக தெரிய வந்துள்ளது. அதனால் மாணவர்கள் பயப்பட தேவையில்லை. மதிப்பெண் குறையும் என்றோ தேர்ச்சி பெறாமல் ஆகி விடுவோமோ என்று பயப்பட வேண்டாம்.

தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து நிதித்துறையிடம் இருந்து ஒப்புதல் வரவேண்டும். நீட் தேர்வு விலக்குக்கான முயற்சி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் பயிற்சி அளிக்கப்படும். வரும் கல்வியாண்டில் பயிற்சி பெற 16 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 44 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்கள் பள்ளியில் தங்களது பெயர்களை பதிவு செய்து விட்டு பின்னர் இடைநிற்றதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் லதா, இணை இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.