தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools