தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு – ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது.
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றக்கிளையின் ஒற்றை நீதிபதி, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆணையிட்டார்.
அதன்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களை கருத்தில் கொள்ளாத எந்திரத் தனமானது ஆகும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன் படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல. அதுமட்டுமின்றி மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.