தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் பீகாரை சேர்ந்த குழுவினரும் இங்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பீகார் சட்டசபையில் நேற்று இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜனதா எழுப்பியது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித்தலைவர் விஜய் குமார் சின்கா, தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பாக தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது’ எனக்கூறினார்.
இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அரசு ஒரு அறிக்கையை சபையில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.