தமிழகத்தில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா முதல் தவணை நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி கடந்த மே மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
மே மாத இறுதி வரையில் சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகை பெறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் முதல் தவணை நிவாரண தொகையை பெறாதவர்கள் ஜூன் மாதமும் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து விடுபட்டவர்களுக்கு முதல் தவணை நிவாரண தொகை ரேஷன் கடைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந்தேதி வரை 2 கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 943 ரேஷன் அட்டைதாரர்கள் முதல் நிவாரண தொகையை பெற்றுள்ளனர். இது 98.79 சதவீதம் ஆகும்.
இன்னும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 406 ரேஷன் அட்டைதாரர்கள் இதுவரை முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை. அதிகபட்சமாக தென்சென்னை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 583 ரேஷன் அட்டைதாரர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 807 ரேஷன் அட்டைதாரர்களும் முதல் தவணை நிவாரண தொகையை பெறவில்லை.
விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் முதல் தவணை நிவாரண தொகை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.