Tamilசெய்திகள்

தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா கட்டுக்குள் வரும் – மருத்துவ நிபுணர்கள் கணிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஓரளவு குறையத் தொடங்கியதையடுத்து பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு கோவில்கள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தாலும் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பத் தொடங்கியது.

இந்தநிலையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகம் முழுவதும் கொரோனா குறையத் தொடங்கி கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக பொது வெளியில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்கவிட்டனர். முககவசம் அணியாமல் வெளியில் செல்லத்தொடங்கினர். சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை.

இதற்கிடையே தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் ஆட்களை திரட்டுவது, கூட்டத்தை கூட்டுவது என பிரசாரத்தில் தீவிரம்காட்ட தொடங்கின. தலைவர்கள் பிரசாரம் செய்யும் இடங்களில் அதிக அளவில் கட்சித்தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.

ஆனால் கூட்ட நெரிசலிலும் தொண்டர்கள் யாரும் முககவசம் அணியவில்லை. பொதுக்கூட்டங்களில் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதன்காரணமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் தற்போது தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1500-ஐ கடந்து விட்டது.

தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்ற அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அவர்களுடன் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்களும், அவர்களுடன் தொடர்புடைய பொதுமக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

அதன்காரணமாக இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது.

தற்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் திருவிழா மற்றும் மதக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிகவளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக மே மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது மக்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.

இதன்காரணமாக ஒரே குடும்பத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எந்தவித அறிகுறியும் தென்படாதவர்கள் பலர் வெளியே சுற்றுகிறார்கள். அவர்களை அடையாளம் காணுவது சவாலான ஒன்று. அதுபோன்ற கொரோனா நோயாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் மட்டுமே பயன்படுகிறது.

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் பொதுமக்கள் இதே பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

இதன்காரணமாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும். இதை கருத்தில் கொண்டே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா கட்டுக்குள் வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.