தமிழகத்தில் மேலும் 3 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதாவது 2018-2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எத்தனை ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த கால கட்டத்தில் தமிழ்நாடு, புதுவையில் 94 வட்டங்கள் அடங்கிய பகுதியில் உள்ள 1 லட்சத்து 36 ஆயிரத்து 790 சதுர கிலோ மீட்டரில் 81 இடங்களில் பெட்ரோல் கண்டுபிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் அனுமதி அளித்து உள்ளன. அதாவது ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு அனுமதி, அவற்றை எடுப்பதற்கான அனுமதி என்ற வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
19 பெட்ரோல் கிணறுகளுக்கு குத்தகை விடுவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டில் புதிதாக 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு திட்டமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 2 திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு, புதுவையில் 2337 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் 477 சதுர கிலோ மீட்டரிலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது 2 திட்டங்கள் மூலமாக கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 1259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டங்களுக்கு தமிழக அரசு தரப்பில் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பதிலில் கூறினார்.