Tamilசெய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எவற்றுக்கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று அதிகாலை 4 மணி முதல் 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் வருமாறு:

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான  தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  (https://eregister.tnega.org). ரெயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர,
பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

உணவகங்கள்  மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள்,  கூட்ட அரங்குகள்  போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.

அத்தியாவசிய துறைகளான தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற
தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.