Tamilசெய்திகள்

தமிழகத்தில் முக கவசம் அணியாத 12 லட்சம் பேர்களுக்கு அபராதம் விதிப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதியில் இருந்து போலீசார் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

கடந்த 52 நாட்களில் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 12 லட்சத்து 9 ஆயிரத்து 584 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 282 பேர் சிக்கி உள்ளனர். வடக்கு மண்டலத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 77 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 2 லட்சத்து 1,633 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 530 பேர் சிக்கியுள்ளனர்.

சென்னைக்கு வெளியே உள்ள நகரப்பகுதிகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 52 நாட்களில் நகர்புறங்களில் முக கவசம் அணியாமல் சுற்றிய 2 லட்சத்து 44 ஆயிரத்து 362 பேர் பிடிபட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 749 பேர் தமிழகம் முழுவதும் சிக்கி இருக்கிறார்கள்.

இதே போன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத குற்றத்துக்காக 60 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. நேற்று ஒரே நாளில் 1,296 வழக்குகளும், நேற்று முன்தினம் 1,552 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடர்பாக தெற்கு மண்டலத்தில்தான் அதிக வழக்குகள் போடப்பட்டுள்ளது. அங்கு 14,838 வழக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையிலும் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 5,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,596 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் சுற்றிய 3 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத 247 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.