Tamilசெய்திகள்

தமிழகத்தில் மதுபான விற்பனை 8 மடங்காக அதிகரிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்ட போதிலும் மது விற்பனை குறையவில்லை. மாறாக 8 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைக்கப்பட்டது. 2006 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,311 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன.

6,736 மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவை தற்போது 5,425 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த காலங்களில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதே காலங்களில் ரூ.4,195 கோடியாக இருந்த மது விற்பனை ரூ.33,746 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த காலங்களில் 2 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை மது விற்பனை உயர்ந்துள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக கூடியுள்ளது. 2007-ல் உள்நாட்டில் தயாரிக்கும் அயல்நாட்டு மதுவகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகின. (ஒரு பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்கள்) இது 2021-ல் 50 லட்சம் பெட்டியாக உயர்ந்துள்ளது.

மது மீதான ஆயத்தீர்வை மற்றும் வாட் வரி உயர்வு மற்றொரு காரணமாகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரீமியம் வகை மதுபானங்கள் தேவை அதிகரித்து இருப்பதும் மது விற்பனை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாதாரண மது வகைகளை விட பிரீமியம் மது வகைகளின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனையின் அளவு அதிகரித்துள்ளது.