தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சாலைவிபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. சாலைவிபத்துகளுக்கு முதன்மைக்காரணம் மதுக்கடைகள்தான் என்பதை அரசு நன்றாக உணர்ந்திருந்தும் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட, முதன்மையான காரணம் மதுக்கடைகள்தான் என்பது புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் உண்மை ஆகும். இதை அறிந்ததால்தான் சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 321 டாஸ்மாக் மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளை பா.ம.க. மூடியது. பின்னாளில் மத்திய, மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி விலக்கு பெற்றதால் அந்த மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகுதான் நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.

மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளின் எண்ணிக்கையில் 20 முதல் 25 சதவீதம் வரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படுபவை ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மது போதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்து காட்டப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு கிடைக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை மது போதையால் நிகழ்ந்தவையாகும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான விபத்துகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகளுக்கு மதுக்கடைகள்தான் காரணம் எனும் போது, அவற்றை மூடுவதுதான் மக்கள்நலன் காக்கும் செயலாக இருக்கமுடியும். குறைந்தபட்சம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், மாவட்ட சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மட்டுமாவது மூடும்படி ஆணையிடுவதுதான் சிறந்த செயலாகும். எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools