தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள், நெசவாளர்கள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. பயனாளிகளிடம் மின்கட்டணத்தை வசூலித்து அதை மாநில அரசு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்திக் கொள்ளலாம். மத்திய நிதியமைச்சகத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மாநில அரசுக்கான கடன்வரம்பு குறைக்கப்படும்.
பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்தம் கொண்டு வருவது மாநில உரிமைகளை பறிக்கிற முயற்சியாகும். இது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை. அதை மத்திய அரசு பறிக்க முயல்கிறது. விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால் அதை எதிர்த்து தமிழகத்தில் கடுமையான போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.