Tamilசெய்திகள்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம். பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தார் .