தமிழகத்தில் 37 சதவீதம் பேர் ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்த பிஏ-2.1.01 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மாதம் மேற்கொண்ட மரபணு பகுப்பாய்வு சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவு வகைகளே தற்போது சமூகத்தில் பெரும்பாலும் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
கொரோனா வைரசின் மரபணுவைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் சில சளி மாதிரிகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பிஏ-2.1.0.1 வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 37 சதவீதம் பேர் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்.பி.பி. வகை தொற்றுக்கு உள்ளானோர் 29 சதவீதம் பேரும், பிஏ-2 வகை தொற்றுக்குள்ளானோர் 5 சதவீதம் பேரும், பிஏ-5 தொற்றுக்குள்ளானோர் 2 சதவீதம் பேரும் உள்ளனர்.
2-ம் அலையின்போது பரவிய டெல்டா வகை தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த தரவுகளின் வாயிலாக தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.