தமிழகத்தில் பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் பாதிப்பு

நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகத்தில் மத்திய அரசின் ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. மற்ற 2 நிறுவனங்களை விட ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை நிகழ்ந்து வந்தது.

லாரிகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு லாரி உரிமையாளர்களிடம் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கியாஸ் லாரி உரிமையாளர்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் வாடகை, கூலி போன்றவற்றை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளாக லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை உயர்த்தி தரமால் இழுத்தடித்து வந்ததால் உரிமையாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் யூனிட்டில் முதலில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோவை பீளமேடு, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.
இதனால் இந்த 5 இடங்களில் இருந்து பாரத் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகள் வினியோகஸ்தர்களுக்கு கொண்டு செல்லவில்லை. தொழிற்சாலையில் சிலிண்டர்கள் தேங்கி கிடக்கிறது. சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கியாஸ் ஏஜென்சிகள் மட்டுமே சிலிண்டர்களை தொழிற்சாலையில் இருந்து ஏற்றி்ச் செல்கிறது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்த லாரிகள் மூலமே சிலிண்டர்களை பெறுவதால் வினியோகஸ்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. வேலை நிரந்தரம் முடிவுக்கு வராவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சமையல் கியாஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் கியாஸ் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் விஜயன் கூறியதாவது:-

சிலிண்டர்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு வாடகை மற்றும் கூலி போன்றவை நிர்ணயித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை உயர்த்தி தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. பி.பி.சி. நிறுவனம் வாடகையை உயர்த்தி தர மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிளாண்ட்டிலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் சிலிண்டர்களை ஏற்றாமல் நிற்கின்றன.இதன் காரணமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools