கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நவ. 9-ந்தேதி அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.
பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது. வருகிற 16-ந்தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படாது. சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.