Tamilசெய்திகள்

தமிழகத்தில் பறக்கும்படை சோதனை – இதுவரை ரூ.1,309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியானது. அதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை திரும்பப் பெறப்பட்டது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த 28-ந்தேதி வரை சோதனைகளில் பிடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.179.91 கோடி ரொக்கப் பணம், ரூ.8.65 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.