X

தமிழகத்தில் பணியாற்றும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இரவு எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஐ.சி.எப். சார்பில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரமாவது ரெயில் பெட்டியையும் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பித்தார்.

பின்னர் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமரின் நோக்கம் இந்திய ரெயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில்கள் உலகத்தரம் வாய்ந்த ரெயில் சேவையாக உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளது, நாடு முழுவதும் மக்கள் இந்த பாதையில் பயணிக்க உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய 5 ரெயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 30 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரத்து 865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை விட 3 மடங்கு அதிகம்.

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை,  ரெயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரெயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.

ரெயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது விபத்துக்குள்ளாகிறது, இதனை தடுக்க ரெயில் தண்ட வாளங்களை உயர்த்தவும், யானைகளை கடக்க தரைப்பாலம் அமைக்கப்படும். முதற்கட்டமாக கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 18 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பணியாற்றும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும், மொழி தெரியாமல் உள்ளதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்காக இந்தியாவில் பல்வேறு சிறப்பான மொழிகள், கலாச்சாரம் நிறைத்துள்ளது இதனால் தமிழகத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள ரெயில் தண்டவாளங்கள் அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள ரெயில்கள் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், ரெயில் தண்டவாளங்களையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 160 கி.மீ. வேகத்தில் செல்லும் பொழுதும் கட்டுப்படுத்த எளிதாக இருக்கும் வகையில், பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஐ.சி.எப். பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா, தலைமை பொறியாளர் எஸ்.சீனிவாஸ், தலைமை நிர்வாக அதிகாரி பி.உதய குமார் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்ற அஸ்வினி அங்கிருந்து சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.