மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி ,கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முழுவதும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் நிருபர்களிடம் கூறியதாவது-
உணவு பொருட்களுக்கு எப்போதும் வரி உயர்வு இருக்கக்கூடாது, இதன் மீது வரி விதித்தால் ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் 80 சதவீதம் பேர் ஏழை நடுத்தர மக்கள் தான், இதுநாள் வரை அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது இல்லை. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை விதித்துள்ளது. இந்த வரி வருகிற 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் உள்ளன. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்த நிலையில் அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க கோரி நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரிசி மீதான ஜிஎஸ்டி வரிக்காக போராட்டம் தொடரும். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக முழுவதும் 8000 ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள் ,சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதுபோல் சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பாபு கூறுகையில், மத்திய அரசு கோதுமை, உளுந்தம் பருப்பு உட்பட 50 உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உணவு பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. உணவுப் பொருட்கள் மீது வரி போட்டால் அது பொதுமக்களை பாதிக்கும். உணவு பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை கண்டித்து அகில இந்திய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது .
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது . சேலத்தில் லீ பஜார் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் .சுமார் 300 கடைகள் அடைக்கப்படுகிறது. வணிகர்கள் பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.