Tamilசெய்திகள்

தமிழகத்தில் நடந்த 5 வது மெகா தடுப்பூசி முகாம் – 22,2,641 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

தமிழகத்தில் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பல்வேறு வழிமுறைகளை அரசு செய்து வருகிறது. இம்மாதம் (அக்டோபர்) இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்ற இந்த முகாமில், நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை விட 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களிலும் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்குகளை தாண்டி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதற்காக கையிருப்பில் இருந்த 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளால் பிரித்து அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.

சென்னை கிண்டி மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மஸ்ஜித் ஜாவித் பள்ளிவாசலில் நடைபெற்ற முகாமை வட சென்னை தி.மு.க. எம்.பி. கலாநிதி தொடங்கி வைத்தார். அப்போது அப்பள்ளிவாசலின் நிர்வாகக்குழு தலைவர் எல்.கே.எஸ்.செய்யது அகமது உடன் இருந்தார்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 22 லட்சத்து 52 ஆயிரத்து 641 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 351 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 2 ஆயிரத்து 290 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர்.

சென்னையில் மட்டும் நடைபெற்ற 1,600 முகாம்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 884 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 69 ஆயிரத்து 545 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 94 ஆயிரத்து 339 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.