அண்ணா திராவிடர் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் வி.திவாகரன் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய தேர்தல் ஆணையத்தால் அண்ணா திராவிடர் கழகம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்திய அரசியல் ஆளுமையான அண்ணாவின் பெயரை தாங்கியுள்ளதால் மொழி மற்றும் சமுதாயத்திற்கான அதி உன்னத லட்சியம் மற்றும் கொள்கைகளை நாங்கள் தாங்கி நிற்கிறோம்.
வேதாந்தா, கெயில் நிறுவனங்களின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12-ந் தேதி நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அண்ணா திராவிட கழகம் ஆதரவு அளிக்கும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடத்தும் பேரணியில் அண்ணா திராவிடர் கழகம் கலந்து கொள்ளும்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதித்தல், எட்டு வழிச்சாலை திட்டம் போன்ற அபாயகரமான திட்டங்களின் ஆபத்தை உணராமல் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர்கள் ஆள்பவர்களுக்கு காவடி தூக்குகின்றனர் என்றால் எம்.எல்.ஏ.க்களும் ஏன் துணை போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஜெயலலிதா மறைந்த பொழுதே அ.தி.மு.க.விற்கு நெருக்கடி காலம் தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் வீழ்ச்சியை ஒத்துக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகள் சொந்தங்களுக்கே சீட்டுகள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க.விற்கு ஆளும் கட்சி என்ற தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது. மத்திய அரசை கண்டு பயப்படுபவர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்வதற்கு தேவையான 9 இடங்களை மட்டும் சொல்லி வைத்தாற்போல் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் அந்த ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு இறங்குமுகமாக உள்ளது. அ.ம.மு.க. தினகரன் ஒரு மூட்டை பூச்சி. அரசியல் கோமாளி. சசிகலா சிறைக்கு செல்ல காரணமே அவர்தான். தினகரன் ஒரு அழிவுச்சக்தி. அவரை சார்ந்து வந்தவர்களை ஆட்டுமந்தை போல் நடத்தினார். அதில் விடுபட்டு ஒவ்வொருவராக வேறு இயக்கங்களுக்கு செல்ல காரணம் தினகரன் தான்.
தற்போது நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. வறட்சியை போக்க மத்தியில் ஆளும் மோடியாலும், தமிழகத்தை ஆளும் எடப்பாடியாலும் முடியாது. ஏனென்றால் சரியான நீர் மேலாண்மை அவர்களுக்கு தெரியாது. தமிழகத்தில் நீர் மேலாண்மை குறித்து என்னிடம் கேளுங்கள். நான் அதற்கான வரைவு திட்ட அறிக்கையை உங்களுக்கு அளிக்கிறேன். அதன்படி செயல்படுங்கள்.
நாம் இப்போது செய்ய வேண்டியது அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்த்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வது. அதனால் தான் மழை பெய்யும். மேலும் ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் அனைத்து ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும்.