X

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தமிழக தேர்தல் அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க முகமைகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து நேற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் காணொலி காட்சி மூலம் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டி.ஐ.ஜி. ஆகியோரும் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவர்கள் எடுத்துரைத்தனர்.

பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குதல், வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப்பதிவை கண்காணிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வதை தடுப்பது, பண பட்டுவாடாவை தடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஆய்வு கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. ஆய்வு கூட்டம் நிறைவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த அளவில் நாங்கள் தயாராக இருக்கிறோம்? என்பது பற்றி ஆய்வு செய்தனர். தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

வாக்குப்பதிவின்போது ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 100 சதவீதம் தேவை என்றால், 130 சதவீத அளவில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்க வேண்டும். அந்த அளவில் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்துடனும் விவிபாட் எந்திரம் இணைக்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் ஒப்புகை சீட்டைப் பார்த்து அவர்களின் வாக்கை உறுதி செய்துகொள்ள முடியும்.

போலீசார் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பதற்றமான அல்லது பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஏனென்றால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு சூழ்நிலைகள் மாறக்கூடும். எனவே அங்கு நிலவும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். அதற்கு காத்திருக்க வேண்டும். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகத்துக்கு ஆய்வுக்காக வரும்போது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil news