Tamilசெய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,35,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 15,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று 13,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 29 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு 6484-ஆக உள்ளது. செங்கல்பட்டில் 1665 பேருக்கும், கோவையில் 863 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 580 பேருக்கும், திருவள்ளூரில் 893 பேருக்கும், திருப்பூரில் 253 பேருக்கும், வேலூரில் 270 பேருக்கும், தூத்துக்குடியில் 146 பேருக்கும், திருச்சியில் 437 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 3043 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75,083-ஆக உயர்ந்துள்ளது.