கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் கடந்த 1-ந்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர்.
இதேபோல் ரெயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரெயில்வே, ஜூன் 12 முதல் படிப்படியாக ரெயில் சேவை துவக்கப்படும் என அறிவித்து, அதபடி முதற்கட்டமாக 15 ஜோடி ரெயில்கள் டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டதால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும் இந்த கருத்தை முன்வைத்து, ரெயில் மற்றும் விமான சேவையை தொடங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று தமிழகத்தில் தமிழக வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது அறிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், அட்டவணைப்படி ஜூன் 30ம் தேதி வரையில் இயங்கும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும். சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.