தமிழகத்தில் ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 20.6.22 முதல் தொடங்கும்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.
தேர்வுக்காக மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மன நிறைவோடு தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
இனிவரும் காலங்களில், ‘நான் முதல்வன்’ கவுன்சிலிங் மூலமாக 9-ம் வகுப்பு மாணவர்களில் இருந்து 10-ம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கிறீர்கள் என்பது வரை உங்களது திறமை என்ன? என்ற அளவுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளி கல்வித்துறை அதில் அதிக கவனம் செலுத்தும். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் இதுபோன்ற கவுன்சிலிங் மையங்களாக விரைவில் மாற இருக்கிறது. உயர்கல்வி படிப்புக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் படித்து என்ன மாதிரியான வேலைக்கு செல்லலாம் என்ற அளவுக்கு இந்த திட்டம் அமையும்.
மாணவர்களுக்கு சொல்லி கொள்வது, பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு படிப்பதை காட்டிலும் உங்களுக்கு எதில் கவனம் அதிகம் எதில் திறமை அதிகம் உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தைரியமாக படியுங்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் இருக்கிறோம்.
10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 23 லட்சம் பேர் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியாகாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
2 செட் வினாத்தாள் பிரிண்ட் செய்கிறோம். தேர்வு எழுதும் அன்றைய தினம் தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து சொல்வோம். அதேபோல் மார்க் விஷயத்தில் பரீட்சை பேப்பர் திருத்தும்போது மாணவர்கள் எழுதிய விடைக்கு ஏற்ப மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.