X

தமிழகத்தில் ஜனவரி 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். இதனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர்.

பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அதனால் உரிய பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். பள்ளிக் கல்வித்துறை மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என அனைத்து பள்ளி பெற்றோர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருப்பதால் முதல்-அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ குழுவினர் மற்றும் உயர்மட்ட குழு அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி பள்ளிகள் திறப்பு தேதியை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் சென்ற ஆசிரியர்கள் திரும்பும் வகையில் 20-ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படுகிறது.

அதற்கு முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்படும்.

மாணவர்கள் பள்ளிக்குள் வந்து வீடு திரும்பும் வரை வகுப்பு அறை, வளாகங்களில் ஆசிரியர்கள் தீவிரமாக கண்காணித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுத்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

9 மாதமாக பூட்டப்பட்டு கிடந்த வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி முழுமையாக தெளிக்கவும், அனைத்து வகுப்புகளிலும் சானிடைசர் வைத்தல் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகக்கவசம் கட்டாயம் அணிந்து வருதல், மாணவர்கள் வருகை இல்லை என்றால் பெற்றோருக்கு தெரிவிப்பது, மாணவர்கள் நலனை பாதுகாக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட உள்ளது.

எனவே பொங்கல் முடிந்தவுடன் பள்ளிகள் திறக்க இருப்பதால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

3 மாதம் நேரடி வகுப்புகள் மூலம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயத்தை நீக்கவும், தேர்வை எதிர்கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கவும் உள்ளனர்.