X

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் 15,384 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,394 ஆக இருந்தது. 2019-ல் 18,129 ஆகவும், 2020-ல் இந்த எண்ணிக்கை 14,527 ஆகவும் குறைந்திருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள 53 மெட்ரோ நகரங்களில் பதிவாகி உள்ள 55,400 விபத்துகளில் 2021-ம் ஆண்டில் சென்னை பெருநகர எல்லைக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி 93 சதவீத விபத்துகளுக்கு அதிக வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது காரணம் எனவும், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளே இந்த விபத்துகளுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

2021-ம் ஆண்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தை அடைந்தபோது தொற்று பரவுவதை தடுக்க பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அதிகமான மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர் என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

ஊரடங்கு காலத்தின்போது காலியான சாலைகளில் அதிவேகத்திலும் அவசரமான முறையிலும் வாகனங்களை ஓட்டியது பல விபத்துகளுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும் பெரும்பாலான மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கை வசதிகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தியதால் குறைந்த படுக்கைகளே தீவிர விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டிருந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் தான் முந்தைய ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் இழப்புகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்து இருப்பது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை 2-வது இடத்தில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டில் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டியபோது 236 பேர் இறந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் இந்த இறப்பு எண்ணிக்கை 15 ஆக குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

அந்த காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு மதுவிற்பனை தடை செய்யப்பட்டிருந்ததும் இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பதில் சென்னை நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது. இதில் 41 உயிரிழப்புகளுடன், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.

சமீபத்திய தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கைபடி 2021-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெரும்பாலானவை (59.7 சதவீதம்) அதிவேகத்தால் நிகழ்ந்து 87,050 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.