X

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் நான்காவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு முழு அளவில் தொடங்கப்பட்டிருக்கிறது. சமூகநீதியை நேசிப்பவர்களின் செவிகளில் இச்செய்தி தேனாக பாய்கிறது. ஆனால், சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாடு, இந்த செய்தி செவிகளில் விழுந்து விடாமல் காதுகளை மூடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் பா.ம.க. குரல் கொடுத்த போதெல்லாம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்கப்படுவதைக் காரணம் காட்டி, ”எரியும் தீபகற்பத்துக்கு நடுவே கற்பூரமாய் தமிழ்நாடு இருக்கிறது. எப்படி மதுவிலக்கை கொண்டு வர முடியும். அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் போது, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தனர். தீமையை திணிக்க அண்டை மாநிலங்களை எடுத்துக்காட்டும் ஆட்சியாளர்கள், சமூகநீதியை நிலை நாட்ட அண்டை மாநிலங்களின் சாதனைகளை கண்டுகொள்ள மறுப்பது ஏன்? இதை விட அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு இருக்க முடியுமா? சமூகநீதி தளத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு இதைவிட பெரிய இரண்டகத்தை செய்ய முடியுமா?

சமூகநீதி தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்து தமிழகத்தில் மாநில அரசின் மூலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் உடனடியாக ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: tamil news