Tamilசெய்திகள்

தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது – பொன் மாணிக்கவேல் பேட்டி

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இன்று திருப்பூர் அருகே உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகிறது. சூறையாடுவது வேறு ஆட்கள் கிடையாது, அரசு தான். குறிப்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு அமைந்துள்ள 55 ஏக்கர் இடம் கோவிலுக்கு சொந்தமானது தான். தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியது 100 சதவீதம் உண்மை.

திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்து பழங்கால கோவில்களை புனரமைக்காமல் இருந்து வருகிறது. பிரதமர் மோடி கூறியது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபிப்பாரானால் என்னுடன் விவாதத்திற்கு தயாரா. மு.க.ஸ்டாலின் சொல்வது 100 சதவீதம் பொய். நான் சொல்வது பொய் என்றால் இன்று இரவுக்குள் உயிர் இழந்து விடுவேன்.

பணியில் இருக்கும்போது கடுமையாக உண்மையாக உழைத்தேன். இப்போதும் உழைத்து கொண்டிருக்கிறேன். கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனும் இல்லை. அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் இல்லை.

மு.க.ஸ்டாலின் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால் இந்து கோவில்களின் இடங்களை ஆக்கிரமிக்கும் அரசு மற்ற மதங்களின் இடங்களை ஏன் தொடுவதில்லை. இனியும் இது போன்று அமைதியாக இருக்க மாட்டோம். இதன் பின் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.