தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 500-க்கும் கீழ் கொண்டு வரப்பட்டது.
எனவே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.
பொது இடங்களில் முக கவசம் அணிவது மறந்து விட்டதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 3-ந்தேதி 494 பேர் பாதிக்கப்பட்டனர். 4-ந்தேதி 490 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது. 3,954 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரையில் 12,513 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 2 லட்சத்து 30,487 பேர் குணமடைந்துள்ளனர். 12,513 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
1-ந்தேதி 171 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2-ந்தேதி 167 ஆகவும், 3ம் தேதி 184 ஆகவும், 4-ந் தேதி 189 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னை வணிக வரித்துறையில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 16 அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியது.
முதலில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு துறையில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற ஊழியர்கள் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தொற்று பரவி உள்ளது.
இதேபோல திருமணம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்பவர்கள் முக கவசம் அணியாமல் இருப்பதால் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
அலட்சியம், மெத்தனப்போக்கு காரணமாக மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.