தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் தவணை தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பலருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்த அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு, கையிருப்பு இல்லாமல் போனது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்பது குறித்து தெரியாத பலர் கொரோனா தடுப்பூசி போட மையங்களுக்கு வந்தனர். அங்கு தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசி வந்தால் மட்டுமே மீண்டும் தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடமுடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.