Tamilசெய்திகள்

தமிழகத்தில் கலெக்டர்கள் பணி மாற்றம் – அரசாணை வெளியானது

தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஏ.பி.கார்த்திக்கேயன் நெல்லை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆனார்.

செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஆனார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பழனி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆனார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை மேலாண்மை இயக்குனர் கே.கற்பகம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு உதவி கலெக்டர் சஞ்சீவனா தேனி மாவட்ட கலெக்டர் ஆனார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிரந்தி குமார் பதி கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறு 11 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இதுதவிர தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார். அவர் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் இணை செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் வணிகவரித்துறை இணை ஆணையராக (மாநில வரிகள்) இடமாற்றம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் எல்.ஏ.லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.ஜெயந்தி பள்ளிக்கல்வித்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு மேகனசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.கதிரவன் தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.லட்சுமி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பூஜா குல்கர்னி தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார். மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் செயலாளர் பி.எஸ்.ராஜசேகர் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் சிறப்பு செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். கோவை வணிக வரிகள் இணை கமிஷனர் (மாநில வரிகள்) சிவராசு வருவாய் நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டார்.

திட்ட மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் ஹர்சகாய்மீனா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையராக (பயிற்சி) இடமாற்றம் செய்யப்பட்டார். தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஜி.லட்சுமி பிரியா ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்து அறநிலையத்துறையின் சிறப்பு பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டி.எஸ்.ஜவகர் தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில திட்ட மேலாளர் சுப்புலட்சுமி நில நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனராக (பொது) மாற்றப்பட்டார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டி.மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் மேலும் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் அலுவல் சாரா இணை செயலாளராகவும் பணியாற்றுவார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுவார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயா சந்திரபானு ரெட்டி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

கோவை கலெக்டர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக (பணிகள்) இடமாற்றம் செய்யப்பட்டார். தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நீரஜ்மிட்டல் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில நகர்ப்புற சுகாதார மேலாளர் அழகுமீனா தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் பவன்குமார் கிரியப்பாநாவர் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) டி.சினேகா ஓசூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் சி.தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். சிப்காட் பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் நில நிர்வாகம்) ரத்தினசாமி வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஆனார். பள்ளிக்கல்வித்துறையில் முன்னாள் துணை செயலாளர் சரண்யா அரி விடுமுறையில் இருந்து திரும்பியதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.