தமிழகத்தில் இதுவரை தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 450-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-
கொரோனா தொற்றை விட கருப்பு பூஞ்சை நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மருந்து இல்லை. ஆனால் மருந்து இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவலை கூறி வருகின்றனர்.
அப்படி இருந்தால் எவ்வளவு நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின்-பி மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட வேண்டும்.
பொய் சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம். இதே நிலை நீடித்தால் நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். தமிழக அரசு விரைந்து செயல்பட்டு மத்திய அரசிடம் இருந்து தேவையான மருந்துகளை பெற வேண்டும். மாற்று வழிகளிலும் மருந்தை பெற்று நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள், கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் கூறியதாவது:-
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் பாதிப்புக்கு ஏற்றவாறு மருந்தை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
2, 3 நாட்களில் மருந்து தமிழகம் வந்து விடும். தற்போதைய நிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.