தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் – தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவிப்பு

பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து வாக்காளர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பயன்படுத்த வேண்டும். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு படிவம் 8 ஐ பயன்படுத்த வேண்டும். இதுகுறித்த சிறப்பு சுருக்கத்த முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். ஒரே கட்டமாக எப்போதும் தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகின்றார்கள் என்பதை எழுத்தப்பபூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும்.

புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களிடையே எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீசார் கள ஆய்வு செய்ய வேண்டும். திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கபட்ட அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பான குற்றங்களில் நிலுவை நிலையினை குறைக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools