தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ராயலசீமா முதல் உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காற்று மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதனாலும், நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையும் எதிர்பார்க்கலாம். உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தேனி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் ஆயக்குடியில் 3 செ.மீ. மழையும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
–