என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார். சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.
சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.