தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்துவரும் நாட்களில் பருவமழை நிலவரம் மற்றும் முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அக்டோபர் 21, 22-ம் தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலத்த காற்று வீசுவதால் கேரள கடற்பகுதிக்கு மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அயனாவரத்தில் 13 செமீ மழை பெய்துள்ளது. பெரம்பூர், நீலகிரி மாவட்டம் கே.பிரிட்ஜ் பகுதியில் தலா 12 செமீ, சென்னை வடக்கில் 10 செமீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.