சென்னை கே.கே.நகரில் 23-வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 கோடியே 72 லட்சத்து 41 ஆயிரத்து 3 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10 கோடியே 30 ஆயிரத்து 346 யாக உள்ளது. முதல் தவனை தடுப்பூசி 91.54 சதவீத பேரும், 2-ம் தவனை தடுப்பூசியை 72.62 சதவீத பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 71 சதவீத பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 8 லட்சத்து 45 ஆயிரத்த 289 பேர் செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர், அதில் 6 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர் எனவும், சென்னையில் முதல் தவனை தடுப்பூசியை 98 சதவீத பேரும், 2-ம் தவனை தடுப்பூசியை 79 சதவீத பேரும் செலுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
மேயரை அழைக்கும் பொழுது, வணக்கத்திற்குரிய என்று அழைக்க வேண்டும். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர்.
அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, மாண்புமிகு என அரசாணை வெளியிட்டார் என குற்றம் சாட்டிய அவர், மேயருக்கு பல சிறப்பு அதிகாரங்கள் உள்ளது என்றும் தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜமேதார் என்ற பட்டம் ஆளுநர், முதல்வர், மேயர் ஆகியோரின் உதவியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் இனி மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என அழைக்க வேண்டும் என்ற அரசாணை குறித்து முதல்-அமைச்சர் பரிசீலிப்பார் என கூறினார்.
உக்ரைனில் இருந்து வந்த 500 தமிழக மருத்துவ மாணவர்களுக்கு முடிந்த வரை தமிழக அரசு உதவி செய்யும்.
தமிழக அரசின் குழு உக்ரேன் சென்றிருப்பது அரசியல் ஆதாயத்திற்கு என்ற அண்ணாமலையின் கருத்திற்கு, ஒன்றிய அரசுக்கு உதவியாக தான் தமிழக அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை அனுப்பி உள்ளது என்றும் அண்ணாமலை பேசுவது தமிழக மக்கள் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.