Tamilசெய்திகள்

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கியது

கொரோனா வைரஸ் தொற்று, ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் ஆகியவை கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

இத்தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக அமைகிறது. அதனால் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதாக போட்டுக் கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கடந்த வாரங்களில் சனிக்கிழமை வந்ததால் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன.

இன்று வழக்கம் போல மீண்டும் சனிக்கிழமைக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

சென்னையில் 1,600 இடங்களில் முகாம்கள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 50 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்னும் 5 லட்சம் பேர் செலுத்த வேண்டிய நிலையில் மெகா முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி காலம் முடிந்தவர்களும் போட்டுக்கொள்ள ஆர்வமாக வந்தனர்.

அடையாறு மண்டலத்தில் குறுக்கு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, இயக்குநர் செல்வவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல புரசைவாக்கம் இ.வாட்ஸ் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பள்ளியின் மேலாளரும், சி.எஸ்.ஐ. சென்னை பேராயருமான ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் பீனா தேவபிரசாத் உள்பட ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளியில் படிக்கும் 400 மாணவிகள் தடுப்பூசி போடுவதற்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.