வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை போன்ற உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் சில பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் வெப்ப தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா 3 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருச்சி மாவட்டம் தென்புறநாடு மற்றும் தர்மபுரியில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.