தமிழகத்தில் இதுவரை 1.24 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.
இதனால் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. சில பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் தடுப்பூசி வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் தடுப்பூசி மையங்கள் தற்போது 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 400 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி மையங்கள் தற்போது 64 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு தடுப்பூசி வர வர மக்களுக்கு போடப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் தடுப்பூசி வரை போடுகிறோம். மத்திய அரசு 2 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பூசியை அனுப்பி வருகிறது. 7 லட்சம் தடுப்பூசி வந்தால் 2 நாளில் தீர்ந்து விடும். மற்ற மாநிலத்தை போல் இடைவெளி விட்டு தடுப்பூசி போடுவதில்லை.
தமிழகத்தில் தினமும் தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று மட்டும் 4 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1.24 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 1.29 கோடி தடுப்பூசி வந்தது. இன்னும் 18 லட்சம் தடுப்பூசி வர வேண்டி உள்ளது. அடுத்த மாதம் 71 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி எவ்வளவு தடுப்பூசி வந்தாலும் அது போதுமானதாக இருக்காது. அந்த அளவுக்கு தடுப்பூசி போட மக்கள் திரண்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் தடுப்பூசி போட வாருங்கள் என்று கூவி கூவி அழைத்தோம்.
இப்போது அந்த நிலை மாறி எந்த மையத்துக்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான் இதற்கு காரணம் என்றார்.