தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி 5 பேர் பலி!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதனால் சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இடி மின்னல் தாக்கி ஐந்து பேர் பலியான நிலையில், செல்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த பெண் ஒருவர் காலமானர். அவரது இறுதிச் சடங்கு மயானத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது, திடீரென் இடி தாக்கியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கீரண்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான விஜயலட்சுமி என்ற பெண், வீட்டின் முன் வைத்திருந்த பொருட்களை எடுக்க சென்றபோது இடி தாக்கி பரிதாபமாக உயிரழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேவிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த அவர், வயலில் வேலைப்பார்த்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி அருகே 3 பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் தனது இடுப்பு சேலையில் செல்போனை சொருகி வைத்திருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில், சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். இதை அருகில் இருந்து பார்த்த இருவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர். காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news