தமிழ் இலக்கிய பேச்சாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நெல்லை கண்ணன் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை டவுன் அம்மன் சன்னதியில் உள்ள அவரது வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வந்தார். அங்கு நெல்லை கண்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவரது மகன்களை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தன்னல நோக்கமில்லாத தமிழக இனம் சார்ந்த மாமனிதர் நெல்லை கண்ணன். தமிழகம் அறிந்த பேரறிஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடல் முழுக்க பயணம் செய்தவர் தான் தமிழ் கடல் நெல்லை கண்ணன். தமிழ்த்தாய் தனது செல்ல மகனை இழந்துவிட்டாள். அன்பு மகனை இழந்து விட்டாள்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழை அருந்தி பருகுபவர்களாக இல்லை. இங்கு ஆளுமை இல்லை. அதனால் தான் தமிழ் அறிஞர்களை பற்றி தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தமிழை வளர்ப்போம் என்று கல்வி அமைச்சர் தெரிவித்து வருகிறாரே என்ற நிருபர்களின் கேள்விக்கு, இந்த இடத்தில் காமெடி செய்ய வேண்டாம் என சீமான் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.