Tamilசெய்திகள்

தமிழகத்திற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய துரோகம் செய்கிறார் – அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். மாற்றி அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வர இருப்பதால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதாக அறிவிப்பார்கள். ஆனால் அதற்கான நிதி தற்போது அரசிடம் உள்ளதா? என தெரியவில்லை.

கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்க கூடாது. தேர்தல்நேரம் என்பதால் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. தகுதியான சட்டம், வலுவான சாட்சியங்களை சேகரித்து, நல்ல வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

பட்டாசு தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ன? என்று எனக்கு புரியவில்லை. பட்டாசு தொடர்பான வழக்கை வாதாட தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை. இதில் ஏதோ சதி நடக்கிறது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும். போராடுபவர்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும்.

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்துவது நியாயமானது. அரசு முதலில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை.

தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *